16-ந்தேதி நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்க முடிவு

16-ந்தேதி நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப் பட்டது.

Update: 2017-08-13 23:00 GMT
திருச்சி,

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சின்னத்தம்பி வரவேற்றார். மாநில துணை தலைவர் சிவசாமி சேர்வை, புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சின்னத்தம்பி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆகஸ்டு 16-ந்தேதி மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் தி.மு.க, கம்யூனிஸ்டு விவசாய சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஏரி மற்றும் ஆற்றுப்பாசன சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் திரளான அளவில் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி அடைய செய்வது.

சம்பா சாகுபடிக்கு கர்நாடகா வழங்கவேண்டிய 70 டி.எம்.சி. தண்ணீரை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், மத்திய- மாநில அரசு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யும்படி கேட்டுக்கொள்வது, ஏரி குளங்களில் உள்ள முள்வேலி மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுக்கவேண்டும், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஏரி மற்றும் வாய்க்கால்களை தூர்வாரவேண்டும்.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும், கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சி. சார்பில் எண்ணெய் எடுக்கும் திட்டத்தையும் உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், செல்லத்துரை, சண்முகவேல், தர்மலிங்கம் உள்பட நிர்வாகிகள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்