காஞ்சீபுரத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய சென்னை வாலிபர் உள்பட 4 பேர் கைது

காஞ்சீபுரத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய சென்னை வாலிபர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-08-13 22:00 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் பல்வேறு இடங்களில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு நடப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலனுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதனையடுத்து பெரிய காஞ்சீபுரம் போலீசார் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடியவர்களை தேடி வந்தனர்.

இதற்கிடையே காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், காஞ்சீபுரத்தில் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது.

மேலும், பிடிபட்டவர்கள் காஞ்சீபுரம் செவிலிமேடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த நிகாஸ் (வயது 19), சென்னை குரோம்பேட்டை ஜெயராம் நகரைச் சேர்ந்த உதயகுமார் (20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். நிகாஸ் வீட்டில் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.

மேலும் இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் காஞ்சீபுரத்தில் பழைய இரும்பு பொருட்கள் கடை நடத்தும் 17 வயது சிறுவனையும், அங்கு வேலை செய்யும் ரகுமான் (42) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நிகாஸ் சென்னையில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. கைதான 4 பேரும் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது சிறுவனை தவிர மற்ற 3 பேரையும் காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவன் மட்டும் வழக்கு விசாரணையின்போது ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்