தர்மபுரி மாவட்டத்தில் பலத்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
தர்மபுரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. கிணறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டன.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
நேற்று அதிகாலையில் மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது. நேரம் செல்ல, செல்ல கன மழையாக மாறியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர் மழை குறைந்து அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. நேற்று முழுவதும் மாவட்டத்தில் வெயில் இல்லாமல் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இந்த மழையினால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:– தர்மபுரி–10, அரூர்–14, பாப்பிரெட்டிப்பட்டி–7, பாலக்கோடு–4, பென்னாகரம்–3, ஒகேனக்கல்–1.20 என மொத்தம் 39.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.