2 இடங்களில் 13 தண்ணீர் டேங்கர் லாரிகள் சிறைபிடிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேர் கைது

தூத்துக்குடி அருகே, நேற்று இரண்டு இடங்களில் 13 தண்ணீர் டேங்கர் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-08-13 23:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து நிலத்தடி நீரை உறிஞ்சி தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்வதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் சமீபகாலமாக மீண்டும் நிலத்தடி நீரை சிலர் அதிக அளவில் உறிஞ்சும் நிலை உருவாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று காலை தூத்துக்குடி அருகிலுள்ள புதுக்கோட்டை யூனியன் அலுவலகம் பகுதியில் தண்ணீர் டேங்கர் லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்துக்கு நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமை தாங்கினார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன், பா.ம.க. தெற்கு மாவட்ட செயலாளர் லிங்கராஜ், நாம்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சுப்பையாபாண்டியன், ஆம்ஆத்மி கட்சி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் குணசீலன், காந்திமதிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, அந்த வழியாக வந்த 11 தண்ணீர் டேங்கர் லாரிகளை சிறைபிடித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 47 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அந்த 11 டேங்கர் லாரிகளும் விடுவிக்கப்பட்டன.

இதே போன்று புதுக்கோட்டை அருகே உள்ள சேர்வைக்காரன்மடம் பகுதியில் நிலத்தடி நீரை ஏற்றி வந்த 2 தண்ணீர் டேங்கர் லாரிகளை அந்த பகுதி மக்கள் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், 2 லாரிகளையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்