செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றிய தம்பதி–குழந்தைகள் மீட்பு

வேலூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது 3 குழந்தைகளை அதிகாரிகள் குழுவினர் மீட்டனர்.

Update: 2017-08-12 23:13 GMT

வேலூர்,

வேலூரை அடுத்த கணியம்பாடி அருகே உள்ள குருமபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. செங்கல் சூளை உரிமையாளர். இவருடைய செங்கல் சூளையில் கணவன்–மனைவி மற்றும் 3 குழந்தைகள் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருவதாக காஞ்சீபுரம் மாவட்ட விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் நலசங்கத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சங்க ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் மற்றும் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட செங்கல்சூளைக்கு சென்று பார்த்தபோது, அங்கு 5 பேர் கொத்தடிமைகளாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள் வேலூர் உதவி கலெக்டர் செல்வராசுக்கு தகவல் தெரிவித்தனர். கொத்தடிமைகளாக பணியாற்றிய 5 பேரையும் மீட்க அவர் உத்தரவிட்டதையடுத்து அதிகாரிகள் குழுவினர் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது கணவன்–மனைவி மற்றும் அவர்களது 3 குழந்தைகள் கொத்தடிமைகளாக இருப்பது உறுதியானது.

விசாரணையில், அவர்கள் காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா காவாம்பயிர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 30) அவரது மனைவி வனிதா (28), மகள் பவித்ரா (11), மகன்கள் கோகுல் (8), ரஞ்சித் (7) என்பது தெரிய வந்தது. செங்கல் சூளை உரிமையாளர் பழனியிடம் இருந்து சக்திவேல் ரூ.15 ஆயிரம் வாங்கியதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இவர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர்.

வார ஊதியமாக ரூ.400 மட்டுமே இவர்களுக்கு வழங்கப்பட்டது. சொந்த ஊரில் நடக்கும் கோவில் திருவிழா, உறவினர்கள் திருமணவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி அளிக்காமல் உரிமையாளர் மறுத்து வந்துள்ளார்.

இதனையடுத்து 5 பேரையும் தாசில்தார் பாலாஜி தலைமையிலான குழுவினர் மீட்டு உதவி கலெக்டர் செல்வராசுவிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர்களுக்கு கொத்தடிமை தொழிலாளர் இடைக்கால நிவாரணத்தொகையாக கணவன்–மனைவிக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் நிதியுதவி மற்றும் ‘விடுதலை சான்றிதழ்’ வழங்கினார்.

மேலும் வேலூர் மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் இந்திரநாத் அவர்களுக்கு ரூ.2 ஆயிரம், 25 கிலோ அரிசி, போர்வை மற்றும் சேலை ஆகியவற்றை வழங்கினார். செங்கல் சூளை உரிமையாளர் பழனி மீது போலீசில் புகார் அளிக்கப்படும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்