கடல் அலையில் சிக்கி ஒருவர் பலி; 2 பேர் கதி என்ன?

புதுவைக்கு சுற்றுலா வந்த இடத்தில் கடலில் குளித்த 3 பேர் அலையில் சிக்கினர். இதில் ஒருவர் பலி ஆனார். மற்ற 2 பேர் கதி என்ன? என்பது பற்றி தெரியவில்லை.

Update: 2017-08-12 23:15 GMT

வானூர்,

விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். தற்போது 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு இருப்பதையொட்டி வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து குவிந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து ராஜேஷ் (வயது 30), சந்தோஷ் (24), அருள்குமார் (24), சக்திகுமார் (22), அசோக்குமார் (20), பிரதீப்குமார் (25), சமரேசன் (24), பாலகிருஷ்ணன் (26), ரகு (22) ஆகியோர் 9 பேர் ஒரு காரில் புதுவைக்கு நேற்று சுற்றுலா வந்தனர்.

புதுவையில் உள்ள விடுதிகளில் அறைகள் கிடைக்காததால் மாநில எல்லையையொட்டி உள்ள விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகில் பெரிய முதலியார்சாவடியில் அறை எடுத்து அவர்கள் தங்கினார்கள்.

அங்கிருந்து அவர்கள் புதுச்சேரி மணக்குள விநயாகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர். நேற்று மாலை கிழக்கு கடற்கரை சாலை வழியாக பொம்மையார்பாளையம் பகுதி கடற்கரைக்கு சென்றனர்.

கடல் அலையில் சிக்கினார்கள்

அப்போது அவர்கள் கடலில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர். அவர்களில் அசோக்குமாரும், பிரதீப்குமாரும் கடலில் ஆழமான பகுதி சென்றனர். அந்த சமயத்தில் திடீரென எழுந்த ராட்சத அலை அவர்கள் இருவரையும் வாரிச்சுருட்டி கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதைப்பார்த்ததும் அவர்களுடன் வந்து இருந்த மற்ற நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே ரகு, பாலகிருஷ்ணன், சமரேசன் ஆகியோர் கடலில் குதித்து அசோக்குமாரையும், பிரதீப்குமாரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் கடலின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது திடீரென எழுந்த மற்றொரு அலை ரகுவை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனால் அவர்களது நண்பர்கள் மேலும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

நண்பர்களை தேடும் முயற்சியை கைவிட்டு கரைக்கு திரும்பிய அவர்கள் அங்கு இருந்த மீனவர்களின் உதவியை நாடினர். உடனே மீனவர்கள் படகுகளை எடுத்துக் கொண்டு கடலில் மூழ்கியவர்களை தேடிப்பார்த்தனர்.

மீட்கும் முயற்சியில் பலியான வாலிபர்

அப்போது ரகுவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அசோக்குமார் மற்றும் பிரதீப்குமார் ஆகியோரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களின் கதி என்ன? என்று தெரியவில்லை. இதுபற்றி ஆரோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

கடலில் மூழ்கி பலியான ரகுவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மீனவர்களின் உதவியுடன் மற்ற 2 பேரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரமாகிவிட்டதால் அந்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் அவர்களை மீனவர்கள் தேட உள்ளனர்.

இந்த பரிதாப சம்பவம் குறித்து தகவல் அறிந்து விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் பொம்மையார்பாளையம் கடற்கரைக்கு வந்து விசாரணை நடத்தினார். சுற்றுலா வந்த இடத்தில் 3 பேரை கடல் அலை இழுத்துச் சென்ற சம்பவத்தால் அவர்களது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

--–

படம் உண்டு, படம் 12–ந்தேதி வானூர் போல்டரில் உள்ளது. படம் எண். 0637

--–

புட்நோட்:–

நண்பர்களை பறிகொடுத்த சுற்றுலா பயணிகளுக்கு விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆறுதல் கூறியபோது எடுத்தபடம்.

– – – – – –

மேலும் செய்திகள்