திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.
அரசூர்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சித்தானங்கூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர் மகன் டேனியல் (வயது 8). இவன் கெடிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தான்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா வீரப்பார் என்ற கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகன் சசிகுமார் (11). இவன் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது கிருஷ்ண ஜெயந்தி விழா, சுதந்திர தினத்தையொட்டி 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால் விடுமுறையை கழிப்பதற்காக சிறுவன் சசிகுமார் சித்தானங்கூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தான்.
இந்த நிலையில் நேற்று காலை டேனியல், சசிகுமார் ஆகிய 2 பேரும் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலருடன் அங்குள்ள ஏரிக்கு குளிக்க சென்றனர். அப்போது ஏரியில் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக டேனியல், சசிகுமார் ஆகிய 2 பேரும் நீரில் மூழ்கினர். இது குறித்து அவர்களுடன் குளிக்க சென்ற சிறுவர்கள் அளித்த தகவலின் பேரில் அப்பகுதி மக்கள் விரைந்து சென்று 2 சிறுவர்களையும் தேடினர். அப்போது டேனியல், சசிகுமார் ஆகிய 2 பேரும் ஏரியில் மூழ்கி இறந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களின் உடலை அப்பகுதி மக்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 2 சிறுவர்களின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவத்தினால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.