அரசு கேபிள் டி.வி. டிஜிட்டல் மயமாக்கம்: செட்டாப் பாக்ஸ் வழங்க பணம் கேட்டு மிரட்டினால் ஆபரேட்டர் உரிமம் ரத்து
அரசு கேபிள் டி.வி. டிஜிட்டல் மயமாக்கப்படுவதால் செட்டாப் பாக்ஸ் வழங்க பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆபரேட்டர்களுக்கு கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஈரோடு,
கேபிள் டி.வி. டிஜிட்டல் மயமாக்கப்படுவதையொட்டி தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய இலவச டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை விலை கொடுத்து வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
சில உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ் வாங்குவதற்கு ரூ.500 செலுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் பொதுமக்களை மிரட்டி வருவதாக புகார் வந்து உள்ளது. அவ்வாறு பணம் கேட்டு மிரட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு செட்டாப் பாக்ஸ் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் ஒரு சில உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் உரிமம் பெற்றுக்கொண்டு அரசு கேபிள் டி.வி. இணைப்பை துண்டித்து தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படுவதாக புகார் வந்தது. இதேபோல் பொதுமக்களை அச்சுறுத்தியும், கட்டாயப்படுத்தி தனியார் செட்டாப் பாக்ஸ் வாங்க வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர் உரிமம் ரத்து செய்யப்படும். இதுதொடர்பான புகார்களை பொதுமக்கள் 18004252911 அல்லது 04242262573 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறிஉள்ளார்.