குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-08-12 23:00 GMT

வடமதுரை,

அய்யலூர் அருகே உள்ள நடுப்பட்டி ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூலம் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டன.

இதனால் கடந்த சில வாரங்களாக அப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வாரத்துக்கு ஒரு முறை பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வினியோகம் செய்யப்படும் தண்ணீரும் கடந்த 10 நாட்களாக வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடுப்பட்டி மேம்பாலம் அருகே காலிக்குடங்களுடன் மறியல் போராட்டம் நடத்தினர். இது குறித்த தகவலறிந்த வையம்பட்டி போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது முறையாக குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் திருச்சி–திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்