சசிகலா அமைத்து கொடுத்த ஆட்சியை கலைக்கும் எண்ணம் இல்லை தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ.

சசிகலா அமைத்து கொடுத்த ஆட்சியை கலைக்கும் எண்ணம் இல்லை என்று தேனியில் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ. பேசினார்.

Update: 2017-08-13 02:30 GMT

தேனி,

தேனி மாவட்ட அ.தி.மு.க. (அம்மா அணி) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனி–போடி சாலையில் உள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் நல்லவேலுச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வுமான தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும் போது கூறியதாவது:–

மதுரை மாவட்டம், மேலூரில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நாளை மறுநாள் (நாளை) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் தேனி மாவட்டத்தில் இருந்து திரளாக பங்கேற்பது தொடர்பாக இந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து வருகிற 23–ந்தேதி வடசென்னையிலும், 29–ந்தேதி தேனியிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும். தேனியில் நடக்கும் கூட்டத்திற்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் தொடர வேண்டும் என்பதற்காக தான் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியை பொதுச்செயலாளர் சசிகலா அமைத்து கொடுத்தார். ஆனால், தற்போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சில அமைச்சர்கள் சேர்ந்து கொண்டு டி.டி.வி.தினகரனுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது, அறிக்கை விடுவது என்பது ஏற்புடையது இல்லை.

சசிகலா அமைத்து கொடுத்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. கட்சியை நாங்கள் பலப்படுத்துகிறோம். ஆட்சியை நீங்கள் நடத்துங்கள் என்று தான் கூறுகிறோம். கட்சியை பலப்படுத்துவதற்காக தான் மாவட்டம் தோறும் டி.டி.வி.தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

சசிகலா குடும்பத்தால் அதிகம் பயன்பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம். டி.டி.வி.தினகரனையும், சசிகலாவையும் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பது என்பது அவருடைய மனசாட்சிக்கே பிடிக்காது. 2000–ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் எந்த நிலையில் இருந்தார்? என்பதும், டி.டி.வி.தினகரனால் தான் உயர்ந்த நிலைக்கு வந்தார் என்பதையும் தேனி மாவட்ட மக்கள் உணர்வார்கள்.

2011–ல் என்னை அமைச்சர் ஆகவிடாமல் தடுத்தது ஓ.பன்னீர்செல்வம் தான். அதனால் தான், தேனி மாவட்ட நிர்வாகிகள் அவர், பின்னால் போகவில்லை. மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சர் ஆனால் கூட பிரச்சினை இல்லை. சசிகலா குடும்பத்திற்கு அவர் செய்த துரோகத்தை கடவுள் மன்னிக்க மாட்டார்.

சசிகலா குறித்து பலர் பல கருத்துகளை சொல்லலாம். ஆனால், நான் சிறையில் அவரை சென்று சந்தித்த போது, ‘அம்மாவின் (ஜெயலலிதா) மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி வருகிறார்களே. அதை தெளிவுபடுத்த ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ இருந்தால் வெளியிடலாமே’ என்று கேட்டேன். அதற்கு அவர், வீடியோவை வெளியிட்டு இத்தனை ஆண்டுகளாக இருந்த நட்புக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் எதையும் செய்ய மாட்டேன் என்றும், பழிச்சொல் தன் மீது விழுந்தால் பரவாயில்லை என்றும் சொன்னார்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டம் முடிந்த பிறகு தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘ஆட்சியை கலைக்க வேண்டும் என்றோ, ஆட்சி மாற்றம் செய்ய வேண்டும் என்றோ எங்களுக்கு எண்ணம் இல்லை. கட்சியை பலப்படுத்த வேண்டும், ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சியை வளர்க்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்’ என்று கூறினார்.

கூட்டத்தில் கதிர்காமு எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்