கம்பம்மெட்டு பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடியில் மின் இணைப்பை துண்டித்த கேரள அதிகாரிகள்

கம்பம்மெட்டு பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடியில் மின் இணைப்பை கேரள அதிகாரிகள் துண்டித்தனர்.

Update: 2017-08-12 23:30 GMT

கம்பம்,

கம்பத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் கம்பம்மெட்டு உள்ளது. தமிழக–கேரள எல்லையாக இப்பகுதி விளங்குகிறது. இதனையொட்டி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. இங்குள்ள சில பகுதிகளை, கேரள மாநிலத்தை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் கேரள அரசு ஆக்கிமித்துள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை காரணமாக இரு மாநில அரசியல் கட்சியினரும் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபடுவதால் அங்கு பதற்றமாக சூழ்நிலை இருந்து வந்தது. இதைக்கருத்தில் கொண்டு கேரளாவை இணைக்கும் குமுளி, போடி மெட்டு பகுதிகளில் தமிழக, கேரள அரசு சோதனைச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.

ஆனால் கம்பம்மெட்டு பகுதியில் கேரள மாநில போலீஸ் சோதனை சாவடி மட்டும் செயல்பட்டது. ஆனால் தமிழக போலீஸ் துறை சார்பில், சோதனை சாவடி அமைக்கப்படவில்லை. கஞ்சா, அரிசி, எரிசாராயம் கடத்தலை தடுக்க வேண்டும் என்பதை காரணம் காட்டி சோதனை சாவடி அமைக்க வனத்துறையினரிடம் போலீசார் அனுமதி கேட்டனர். ஆனால் போலீசாரின் கோரிக்கையை வனத்துறையினர் பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டனர்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பம்மெட்டு பகுதியில், தமிழக வனப்பகுதியை ஆக்கிரமித்து எல்லை பகுதிக்குள் கேரள கலால் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்தனர். இதையடுத்து தமிழக வனத்துறையினருக்கும், கேரள போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இப்பிரச்சினை குறித்து இருமாநில போலீசாரும் விசாரணை நடத்தினர். எல்லையை நிர்ணயிப்பதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக கேரள அரசியல் கட்சியினர் எல்லைப்பகுதிக்குள் அவ்வப்போது நுழைந்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவு கொடுத்து வந்தனர்.

இதன் எதிரொலியாக, கம்பம்மெட்டில் தமிழக போலீஸ் சோதனை சாவடி அமைப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்தனர். அதன்படி கடந்த மாதம் 8–ந்தேதி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில், தமிழக எல்லையில் போலீஸ் சோதனைச்சாவடி செயல்பட தொடங்கியது.

இந்த சோதனை சாவடிக்கு புதிதாக மின்சார இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் கம்பம்மெட்டில் உள்ள தமிழக வனத்துறை அலுவலகத்தில் இருந்து தற்காலிகமாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விளக்குகள் எரிய விடப்பட்டன. ஆனால் தமிழக வனத்துறை அலுவலகத்துக்கு, கேரள மின்சார வாரியத்தில் இருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த 10–ந்தேதியன்று கேரள மின்வாரிய அதிகாரிகள், வனத்துறை அலுவலகத்தில் இருந்து சோதனைச்சாவடிக்கு செல்கிற மின் இணைப்பை துண்டித்து விட்டனர். இதனால் சோதனை சாவடி இரவு நேரத்தில் இருளில் மூழ்கியது.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சூரிய ஒளி மின்தகடு (சோலார்) பொருத்தி அதில் இருந்து மின்சாரம் எடுத்து பயன்படுத்த அவர் உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் மின் இணைப்பை துண்டித்த 24 மணி நேரத்துக்குள், சூரிய ஒளி மின்தகடு பொருத்தி மின் விளக்கு எரிய விடப்பட்டது.

இரவில் தானாக எரிந்து, பகலில் அணைந்து விடும் வகையில் தானியங்கி தொழில் நுட்பத்துடன் சோலார் விளக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், சோதனை சாவடியில் வயர்லெஸ், தொலைதொடர்பு ஆகியவற்றுக்கு தேவையான மின்சாரத்துக்கு அதிக திறன் கொண்ட சூரிய ஒளி மின்தகடு மற்றும் பேட்டரிகள் பொருத்தும் பணி விரைவில் நடைபெறும் என்றனர்.

மின் இணைப்பை துண்டித்தது குறித்து கேரள மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, வனத்துறை அலுவலகத்துக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பில் இருந்து அனுமதியில்லாமல் போலீஸ் சோதனைச்சாவடிக்கு மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கம்பம்மெட்டு பகுதியை சேர்ந்த சிலர், மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் தான் சோதனைச்சாவடிக்கு செல்லும் மின்வயர் துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழக போலீஸ் அதிகாரிகள், கேரள மின்வாரியத்தில் முறையாக விண்ணப்பம் செய்தால் உடனடியாக புதியதாக மின் இணைப்பு வழங்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்