மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் தமிழக அரசு கண் மூடித்தனமாக ஆதரிக்கிறது வைகோ பேட்டி

மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் தமிழக அரசு கண்மூடித்தனமாக ஆதரிக்கிறது என்று திருச்சியில் வைகோ கூறினார்.

Update: 2017-08-12 23:15 GMT
திருச்சி,

ம.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு அடுத்த மாதம் (செப்டம்பர்) 15–ந்தேதி தஞ்சாவூரில் நடைபெற உள்ளது. நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பை மாணவர்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை. சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தி தமிழகத்தை மத்திய அரசு ஏமாற்றி விட்டது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மத்திய அரசு விலக்கு அளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஜல்லிக்கட்டுக்கு எதிராக மாணவர்கள் வெகுண்டெழுந்து போராட்டம் நடத்தியது போன்ற ஒரு போராட்டத்தை நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறவும் மாணவர்கள் நடத்த வேண்டும். அதுவரை மத்திய அரசு உதவி செய்யாது. நீட் தேர்வு விவகாரத்தில் சமூக நீதி சாகடிக்கப்பட்டு விட்டது.


ஜெயலலிதா தமிழக முதல் அமைச்சராக இருந்த போது தமிழகத்திற்கு உடன்பாடு இல்லாத மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் எதிர்த்தார். குறிப்பாக முல்லைப்பெரியாறு, காவிரி நீர் பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகளுக்காக மத்திய அரசுக்கு எதிராக வாதாடி சாதித்தார். ஆனால் இப்போது மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் தமிழக அரசு கண்மூடித்தனமாக ஆதரித்து வருகிறது. இதனால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஜெயலலிதா இப்போது உயிரோடு இருந்திருந்தால் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களில் பாரதீய ஜனதாவிற்கு ஆதரவு கொடுத்திருக்க மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

 அ.தி.மு.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல்கள் பற்றி வைகோவிடம் கேள்வி கேட்டபோது ‘அதுபற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை’ என்றார்.


இதனை தொடர்ந்து திருச்சியில் ம.தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் டாக்டர் ரொஹையா ஷேக் முகமது தலைமையில் நடந்த மகளிர் அணி மாநில, மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


கூட்டத்தில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும், ஏழைகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் ரத்து செய்யப்படாது என்ற உறுதியை மத்திய அரசு அளிக்கவேண்டும், சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்காக வைகோ எடுத்து வரும் நடவடிக்கைகளில் மகளிர் அணியினரும் பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, துணை பொதுச்செயலாளர் துரை பாலகிருஷ்ணன், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் பெல் ராஜமாணிக்கம், மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, சேரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். பின்னர் இரவு ம.தி.மு.க. திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

மேலும் செய்திகள்