தூக்குப்போட்டு பட்டதாரி வாலிபர் தற்கொலை வேலை கிடைக்காததால் விபரீத முடிவு

ராஜாக்கமங்கலம் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-08-12 22:15 GMT
ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஆலங்கோட்டை, கோவில்குளத்தை சேர்ந்தவர் சிதம்பரன். இவரது மகன் சுமன் (வயது25),  பி.எஸ்சி. (வேளாண்மை) பட்டதாரி. இவர் பல மாதங்களாக வேலை தேடி வந்தார். ஆனால், அவரது படிப்பு ஏற்ற வேலை கிடைக்கவில்லை.

இதனால், கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். அத்துடன், வீட்டில் உள்ளவர்களிடம் சரியாக பேசாமல் இருந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில், வாழ்க்கையில் வெறுப்படைந்த சுமன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்