தேசிய குடற்புழு நீக்க முகாம் கலெக்டர் லட்சுமிபிரியா தொடங்கி வைத்தார்

தேசிய குடற்புழு நீக்க முகாமை கலெக்டர் லட்சுமிபிரியா தொடங்கி வைத்தார்.

Update: 2017-08-12 23:00 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெற்றது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்ற முகாமினை மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா தொடங்கி வைத்து 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- அரியலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் குடற்புழு நீக்க மருந்து -மாத்திரைகள் 2 லட்சத்து 46 ஆயிரம் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக இப்பள்ளியில் 995 மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத 1 முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், பள்ளி செல்லாத 1 முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு (1 முதல் 12-ம் வகுப்பு வரை) பள்ளியிலேயே குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இப்பணிகளுக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை யினருடன் பள்ளி கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணி திட்ட துறை பணியாளர் மற்றும் அலுவலர்கள் இணைந்து பணிபுரிகின்றனர். குடற்புழு நீக்கம் குழந்தைகளுக்கு ரத்தசோகையை தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.

அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி மைய பணியாளர்கள், பெற்றோர்களை ஊக்குவித்து அனைத்து குழந்தைகளையும் குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதற்கு ஊக்கு விக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவியர்கள் குடற்புழு ஏற்படாதவாறு அனைவரும் கழிவறையை பயன்படுத்த வேண்டும். மேலும், விடுபட்ட குழந்தைகளுக்கு 17.8.2017 அன்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலம் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் டீனா குமாரி, துணை இயக்குனர் பொது சுகாதாரத்துறை ஹேமசந்த்காந்தி, வட்டார மருத்துவர் அலுவலர் குமிழியம் மரு.மேகநாதன், மருத்துவ அலுவலர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்