வீடு, வீடாக சென்று டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி; அதிகாரி ஆய்வு

தஞ்சையில் வீடு, வீடாக சென்று டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி நடைபெற்றதை தலைமை பூச்சியியல் வல்லுனர் குமார் ஆய்வு செய்தார்.

Update: 2017-08-12 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின்படி மாநகராட்சி ஆணையாளர் வரதராஜ் மேற்பார்வையில் தஞ்சையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி நடைபெற்று வருகிறது. அதன்படி ஒவ்வொரு வார்டிலும் ஒருங்கிணைந்த துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று தஞ்சை மருத்துவகல்லூரி சாலை பகுதியில் 39-வது வார்டில் துப்புரவு பணி நடைபெற்றது. ஒவ்வொரு வீதியாக துப்புரவு பணியாளர்கள் சென்று சாலையோரம் தேங்கியிருந்த மழை தண்ணீரை அகற்றினர். குப்பைகளை அப்புறப்படுத்தினர். பின்னர் வீடு, வீடாக சென்று மாடியில் மழை தண்ணீர் தேங்கியிருக்கிறதா? டயர், உடைந்த பாட்டில், குடங்கள் ஆகியவை போடப்பட்டு இருக்கிறதா? என பார்வையிட்டனர். சில வீடுகளில் மாடியில் மழை தண்ணீர் தேங்கியிருந்தது. அவற்றை பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். வீட்டு வளாகத்தில் கிடந்த உடைந்த பொருட்களை எல்லாம் எடுத்து சென்றனர்.

தண்ணீர் தொட்டிகளை பார்வையிட்டு அவற்றில் டெங்கு கொசுப்புழுவை ஒழிக்கும் வகையில் மருந்து ஊற்றினர். இந்த பணியை சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனரக தலைமை பூச்சியியல் வல்லுனர் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது, டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசுப்புழுவை அழிக்க தண்ணீரில் மருந்து ஊற்றப்படுவதுடன், வளர்ந்த கொசுவை ஒழிக்க புகை மருந்து அடிக்கப்படுகிறது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குடியிருப்போர் நலச்சங்கத்தினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களையும் இந்த பணியில் ஈடுபடுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக தண்ணீரில் மருந்து ஊற்ற துப்புரவு பணியாளர்கள் வந்தால் அவர்களை வீட்டிற்குள் அனுமதித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

ஆய்வின்போது மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம், முதுநிலை பூச்சியியல் வல்லுனர் செய்யதுஆசிப், துப்புரவு ஆய்வாளர்கள் ரமேஷ், ராமச்சந்திரன், ரஞ்சித், சேவியர் ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்