அர்ப்பணிப்பு உணர்வுடன் ரஜினி, கமல் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் விவேக் பேச்சு
அரசியலுக்கு ரஜினி, கமல் என யார் வேண்டுமானாலும் வரலாம். வந்த பிறகு, 100 சதவீதம் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும்’ என நாமக்கல்லில் நடந்த விழாவில் நடிகர் விவேக் பேசினார்.
நாமக்கல்,
நாமக்கல் போதுப்பட்டியில் செயல்படும் கிரீன்பார்க் மெட்ரிக் பள்ளியில் நடந்த கலை விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் விவேக் கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகம் முழுவதும் பரவலாக மழை இல்லை. அதனால், நிலத்தடி நீர்மட்டம் இல்லை. விவசாயம் பாதிக்கப்பட்டதுடன், விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு ஒரே மாற்று மருந்து மாணவர்கள், இளைஞர்கள் தான். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் என்னிடம் சொன்னதுபோல், கிரீன் கலாம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம், தமிழகத்தில், இதுவரை 28 லட்சத்து, 90 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
இதுபோதாது. அவர் எனக்கு கொடுத்த இலக்கு, ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்பது ஆகும். அந்த இலக்கை நோக்கி செல்கிறேன். மேலும் எவ்வளவு மரங்கள் வளர்ந்துள்ளது என்பதைவிட, மரங்கள் நடவேண்டும் என்ற எண்ணத்தை அதிகமாக மாணவர்கள், இளைஞர்கள் மனதில் விதைத்துள்ளேன். இந்த பணி கடந்த, 2009–ம் ஆண்டில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது, தமிழகம் முழுவதும் மரம் நடும் இயக்கம் தோன்றி, மரம் நடுகின்றனர். எனது அறைகூவல் என்னவென்றால், தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், தங்கள் பகுதியில் தூர்ந்து கிடக்கின்ற ஏரி, குளங்களை சொந்த முயற்சியில் தூர்வார வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் ஆக்கப்பூர்வமான முயற்சியில் இறங்க ஆரம்பித்தால், அரசு அதிகாரிகளும், அரசும் தானாக உதவிக்கு வருவார்கள் என்று தோன்றுகிறது. குளம், ஏரி தூர் வாருவது, மரம் நடுவது மக்கள் இயக்கமாக மாறவேண்டும்.
இது, ஜனநாயக நாடு. ரஜினி, கமல், இந்தியாவில் பிறந்தவர்கள், இம்மண்ணின் மைந்தர்கள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு நன்கு அறிகமானவர்களாக இருப்பதால், ரஜினி, கமலை அரசியலுக்கு வருவதை ஆவலுடன், ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வந்து விடலாம். வந்த பிறகு, 100 சதவீதம் அர்ப்பணிப்பு உணர்வுடன், பெருந்தலைவர் காமராஜர், கக்கன், ஓமாந்தூர் ராமசாமி, பசும்பொன் முத்துராமலிங்கம், அப்துல்கலாம் போல் தன்னலமற்ற தலைவர்களாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.