அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

ராமநாதபுரத்தில் அரசுகல்லூரி மாணவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2017-08-12 23:00 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த 500–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். 100–க்கும் மேற்பட்ட வெளியூர் மாணவர்களும் இங்கு படிக்கின்றனர். அவர்களுக்கு வசதியாக கல்லூரி அருகில் விடுதி அமைத்து தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் இதுவரை விடுதி வசதி செய்து தரவில்லை. மேலும் கடந்த 2 வருடங்களாக பட்டமளிப்பு விழாவும் நடத்தப்படவில்லை. எனவே இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தை தொடங்கி உள்ளனர். வகுப்புகளுக்கு செல்லாமல் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றி கல்லூரி மாணவர்கள் கூறியதாவது:– பல வருடங்களாக கல்லூரி அருகே தங்கும் விடுதி அமைக்க வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை அதற்கு கல்லூரி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதனால் வெளியூர் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுஉள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழாவும் நடத்தப்படவில்லை. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு செல்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர். தகவல் அறிந்ததும் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து முதுகலை மாணவர்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை விடுதியில் இம்மாத இறுதிக்குள் இடம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்