குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா: பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

தசரா திருவிழாவை முன்னிட்டு, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து, விரதத்தை தொடங்கினர்.

Update: 2017-08-12 20:30 GMT

குலசேகரன்பட்டினம்,

தசரா திருவிழாவை முன்னிட்டு, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து, விரதத்தை தொடங்கினர்.

தசரா திருவிழா

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து, அம்மனை வழிபடுகின்றனர்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 21–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 12 நாட்கள் நடக்கிறது. 10–ம் திருநாளான செப்டம்பர் 30–ந்தேதி இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, மகிஷாசுரனை வதம் செய்யும் அன்னையை தரிசிப்பார்கள்.

விரதம் தொடங்கினர்

தசரா திருவிழாவையொட்டி, பல்வேறு நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் நேற்று காலையில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் கடலில் புனித நீராடி, செவ்வாடை அணிந்து, கோவில் அர்ச்சகரிடம் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் பக்தர்கள், அங்குள்ள கோவில் வளாகத்தில் குடில் அமைத்து தங்கியிருந்து, அம்மன் திருப்புகழை பாடி வழிபடுவார்கள். அவர்கள் ஒருவேளை மட்டும் பச்சரிசி உணவு சாப்பிடுவார்கள்.

தசரா திருவிழா கொடியேற்றம் நடந்ததும், விரதம் இருக்கும் பக்தர்கள் காப்பு அணிவார்கள். பின்னர் அவர்கள் சிவபெருமான், காளி, விநாயகர், முருகர், கிருஷ்ணர், அனுமார், குறவன், குறத்தி, நர்சு, போலீஸ் போன்ற பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து கோவிலில் செலுத்துவார்கள்.

மேலும் செய்திகள்