பாளையங்கோட்டையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்யக்கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பு நெல்லை மாவட்டம் பிரிவு சார்பில் பாளையங்கோட்டை ஜவகர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-08-12 21:00 GMT

நெல்லை,

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்யக்கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு நெல்லை மாவட்டம் பிரிவு சார்பில் பாளையங்கோட்டை ஜவகர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் கண்மணி மாவீரன் தலைமை தாங்கினார். தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் அப்துல்ஜப்பார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் முத்துவளவன், ராம்குமார், மதன், கணேசன், முத்துக்குமார், நெல்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டியும், சுதந்திர தின விழாவை முன்னிட்டும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

விடுதலை செய்ய வேண்டும்

அப்போது அவர் பேசுகையில், “10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்டோர் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அதேபோல் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் அப்பாவி முஸ்லிம்களையும் விடுதலை செய்ய வேண்டும். கேரள மாநிலத்தில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த கைதிகள் நன்னடத்தையின் காரணமாக விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த நடைமுறையை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்“ என்றார்.

கோ‌ஷங்கள்

தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் முருகேசன், குயிலி நாச்சியார், சுதா, நகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்