பெற்றோரிடம் தகராறு: கம்ப்யூட்டர் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

பெற்றோரிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக கம்ப்யூட்டர் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-08-11 23:02 GMT
சென்னை,

சென்னை நந்தனம் சி.ஐ.டி.நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் அரவிந்தகுமார் (வயது 25). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரவிந்தகுமாருக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த அரவிந்தகுமார் மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு ஆண்கள் விடுதியில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அரவிந்தகுமார் தங்கி இருந்த அறையின் கதவு காலையில் இருந்தே பூட்டிய நிலையில் இருந்தது. நீண்ட நேரம் தட்டியபோதும் கதவு திறக்கப்படவில்லை.

தற்கொலை

இதனால் சந்தேகம் அடைந்த விடுதியின் உரிமையாளர் சந்திரசேகர் அறையின் பின்பக்கம் உள்ள ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது அறையின் உள்ளே அரவிந்தகுமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி அசோக்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அரவிந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநங்கைக்கு கத்திக்குத்து

* மெரினா கடற்கரையில் சூளைமேட்டை சேர்ந்த திருநங்கை சவீதாவை (31) கேலி செய்து கத்தியால் குத்திவிட்டு வாலிபர்கள் சிலர் தப்பிச்சென்றனர். இதில் காயம் அடைந்த சவீதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

* ‘மாவா’ போதைப்பொருள் விற்ற அயனாவரத்தை சேர்ந்த அஜய்திவாரி (42) கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

* புளியந்தோப்பு, வியாசர்பாடி பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்ற பல்லாவரத்தை சேர்ந்த சரவணகுமார் (21), பெரம்பூரை சேர்ந்த முத்து (48), டில்லிபாபு (60) மற்றும் ராஜா (41), பாலன் (57) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 5 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

* புரசைவாக்கத்தில் உள்ள வணிக வளாகத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுபாட்டில்கள் பறிமுதல்

* அய்யப்பன்தாங்கலில் கட்டிட கட்டுமான பணியில் ஈடுபட்டு அதற்கு கூலியாக ரூ.25 ஆயிரம் கேட்ட படப்பையை சேர்ந்த காத்தவராயனை (46) கத்தியால் குத்திய கட்டிட உரிமையாளர் சங்கர் (60) கைது செய்யப்பட்டார். காயமடைந்த காத்தவராயன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

* ஓட்டேரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற புளியந்தோப்பை சேர்ந்த சுரேஷ் (22), புஷ்பா (62) ஆகியோரை கைது செய்த போலீசார் 200 மதுபாட்டில்கள், மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

* மடிப்பாக்கத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கோவிலம்பாக்கத்தை சேர்ந்த பிரசாந்த் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* எண்ணூர் வ.உ.சி. நகரை சேர்ந்த தொழிலாளி ஜாகீர்உசேன் (46) எண்ணூர் கடற்கரை சாலையில் சென்றபோது கார் மோதி இறந்தார்.

மேலும் செய்திகள்