கொத்தவால்சாவடியில் குடோனில் பதுக்கிய ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் மேலாளர் கைது
கொத்தவால்சாவடியில் குடோனில் பதுக்கிய ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக குடோன் மேலாளரை கைது செய்தனர்.
ராயபுரம்,
சென்னை கொத்தவாசல்சாவடி, கோவிந்தப்பநாயக்கன் தெருவில் உள்ள குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் தலைமையிலான போலீசார் அங்கே விரைந்து சென்று அந்த குடோனில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு ஒரு மினி வேனில் ஏற்றிக்கொண்டிருந்த மூட்டைகளை சோதனை செய்தனர்.
அதில் தடை செய்யப்பட்ட ‘ஜர்தா’ புகையிலை இருப்பது தெரிந்தது. மேலும் குடோனில் 50 மூட்டைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மினிவேனும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலாளர் கைதுஇது தொடர்பாக குடோன் மேலாளர் சரவணனை(வயது 35) போலீசார் கைது செய்தனர். விசாரணையில், புகையிலை பொருட்களை ஆமதாபாத்தில் இருந்து மொத்தமாக கொண்டு வந்து குடோனில் பதுக்கி வைத்து, சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு பிரித்து அனுப்பி வந்தது தெரிய வந்தது.
குடோனில் புகையிலை மூட்டைகளை பதுக்கி வைக்க கூறியது யார்?, அவருடன் தொடர்பு உடைய வியாபாரிகள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.