ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்ப்பு வகுப்புகளை புறக்கணித்து மாணவிகள் போராட்டம்
ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று வகுப்புகளை புறக்கணித்து பள்ளி மாணவிகள் போராட்டம் நடத்திய சம்பவம் பரங்கிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பரங்கிப்பேட்டை,
பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 மாணவிகளுக்கு கீரப்பாளையத்தை சேர்ந்த விமல்ராம் என்ற ஆசிரியர் வேதியியல் பாடம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, வகுப்புக்கு வந்த முஸ்லிம் மாணவிகளிடம் ‘பர்தா’ அணியக்கூடாது எனவும், ‘பர்தா’வை கழற்றி வைத்தால் ஒவ்வொரு மாணவிகளும் சினிமா நடிகைகள் போல் அழகாக இருப்பதாகவும் கூறி வர்ணித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவிக்கவே, பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. பொங்கி எழுந்த பெற்றோர்கள் கடந்த 8–ந் தேதி பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் ஆசிரியர் விமல்ராமை பணி நீக்கம் அல்லது இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், மாணவிகள் பயிலும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களுக்கு பதிலாக ஆசிரியைகளை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இது பற்றி தலைமை ஆசிரியர் கண்ணதாசனிடமும் முறையிட்டனர். அவரும், இது தொடர்பாக விசாரணை நடத்தி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் விமல்ராமிடம் பரங்கிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து ஆசிரியர் விமல்ராம் தற்காலிக விடுமுறையில் சென்றுவிட்டார். புகாரில் சிக்கிய ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் பிளஸ்–1, பிளஸ்–2 மாணவிகள் வழக்கம்போல் நேற்று காலை 9 மணிக்கு பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். இதில் ஒரு சில மாணவிகளை தவிர மற்ற அனைத்து மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து, பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மோகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், பொதுமக்களுக்கு இடையூறாக மறியலில் ஈடுபடுவது தவறானது, சட்டத்திற்கு விரோதமானது என்று கூறினர்.
இதையடுத்து மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு, பள்ளிக்கூடத்துக்குள் சென்றனர். அங்கு வளாகத்தில் அனைவரும் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆசிரியர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவிகள் கூறுகையில், ஆசிரியர் விமல்ராம் எந்த தவறும் செய்யவில்லை. அவர் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவரை பணியிட மாற்றம் செய்யவோ அல்லது அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையோ எடுக்கக்கூடாது என்று கூறினர்.
அதற்கு ஆசிரியர்கள், இது தொடர்பாக மேல் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறினர். இதை ஏற்ற மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர். முஸ்லிம் மாணவிகளை பர்தா அணியக்கூடாது என்று கூறிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கடந்த 8–ந் தேதி பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று கூறி அதே பள்ளி மாணவிகள் நேற்று போராட்டம் நடத்திய சம்பவம் பரங்கிப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.