கோம்பைத்தொழு வனப்பகுதியில் பலத்த மழை: மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
கோம்பைத்தொழு வனப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடமலைக்குண்டு,
கடமலை–மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி உள்ளது. வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் இந்த அருவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கும். இங்கு குளிப்பதற்காக திண்டுக்கல், தேனி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவர்.
குறிப்பாக விடுமுறை நாட்களில் அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். கோம்பைத்தொழு வனப்பகுதியில் மழை பெய்தால் தான் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். ஆனால் கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யவில்லை. இதனால் அருவியில் தண்ணீர் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்தது.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக, கோம்பைத்தொழு வனப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மேகமலை அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு வருகிற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் அருவிக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
இதன்காரணமாக வாகனங்களை ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு முன்னதாகவே நிறுத்தி விட்டு, அருவிக்கு சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.