தூர்வாரும் பணியில் முறைகேடு புகார்: ஆதனூர் கண்மாயில் அதிகாரிகள் ஆய்வு

மானாமதுரை அருகே ஆதனூர் கண்மாயில் தூர்வாரும் பணியில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரை அடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் கண்மாயில் ஆய்வு செய்தனர்.

Update: 2017-08-11 22:00 GMT

மானாமதுரை,

மானாமதுரை அருகே உள்ளது ஆதனூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். இந்த கிராம கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து 7 கி.மீ. தூரத்திற்கு பாசன கால்வாய் உள்ளது. கீழப்பசலை கால்வாய் வழியாக வரும் வைகை ஆற்று தண்ணீர் மானாமதுரை பைபாஸ் ரோடு அருகே பிரிந்து 3 கி.மீ. தூரம் சென்று ஆதனு£ர் கண்மாய்க்கு வரும். இந்த கண்மாயை நம்பி நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட ஏராளமான விவசாய பணிகள் நடந்து வந்தன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதனூர் கண்மாய் தூர்வாரப்படாததால் கண்மாயில் மண் மேடாகிவிட்டது. மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்காமல் வெளியேறி வந்தது. இதனால் ஆதனூர் கண்மாயை தூர்வார வேண்டும் என்று கிராமமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்திருந்தனர்.

சமீபத்தில் விவசாய தேவைகளுக்காக கண்மாய்களில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு அரசு அறிவித்ததை அடுத்து ஆதனூர் கண்மாயில் மண் அள்ள முறையாக அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கண்மாயில் மண் அள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதனூர் கண்மாயில் அரசு அனுமதி அளித்த ஆழத்திற்கும் மேலாக மண் அள்ளப்படுவதாக புகார் வந்தது. ஆனால் இதுபோன்று புகார் அளித்து கண்மாய் தூர்வாரும் பணிக்கு இடையூறு செய்வதாக ஒருதரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து ஆதனூர் கண்மாயில் வருவாய்துறை அதிகாரிகள் ராஜாமணி, பாலா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். சரியான அளவில் மண் எடுக்கப்பட்டதா என அவர்கள் ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்