திருவாடானை யூனியன் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை

திருவாடானை யூனியன் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2017-08-11 22:30 GMT

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட கலெக்டர் நடராஜன் உத்தரவின் பேரில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்படி திருவாடானை யூனியன் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், கிராம ஊராட்சி மன்றங்கள் சார்பில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலை தடுக்க பல்வேறு வகையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சி.கே.மங்கலத்தில் உள்ள பழைய இரும்பு கடைகள் மற்றும் டிராக்டர் பழுது நீக்கும் கம்பெனிகள் ஆகியவற்றில் ஆய்வு செய்த பொது அங்கு பாதுகாப்பற்ற நிலையில் திறந்தவெளியில் குவிக்கப்பட்டிருந்த பழைய காலி பாட்டில்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் தேங்கும் வகையில் போடப்பட்டு இருந்த பொருட்கள் மற்றும் பயன்படாத வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். மேலும் இதுபோன்ற திறந்த வெளியில் பாதுகாப்பில்லாமல் பொருட்களை போடக்கூடாது என்றும், இதற்கென தனியாக கூடாரம் அமைத்து பாதுகாப்புடன் வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து அப்பகுதியில் டெங்கு தடுப்பு பணிகளை ஆய்வு செய்த அவர் வீடு வீடாக சென்று டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதை ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் டெங்கு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியதுடன் டெங்கு அறிகுறிகள் குறித்தும், வீடுகளை சுற்றிலும் சுகாதாரமாக வைத்து கொள்ளவும், தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும், காய்ச்சல் வந்தவுடன் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர் ஆலோசனைப்படி நடந்து கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் அப்பகுதியில் சுகாதார அலுவலர்கள் சுகாதார பணிகளில் ஈடுபடும் விதம், டெங்கு குறித்த விழிப்புணர்வு பணிகளில் பொதுமக்களின் பங்கேற்பு குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின் வெள்ளையபுரம், புலியூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வீடுகளின் மேல்மாடிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது வீட்டின் மொட்டை மாடிகளில் மழைநீர் தேங்கி கிடப்பதை பார்த்த அவர் உடனடியாக மழை நீரை அப்புறப்படுத்த வீட்டின் உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இது போன்று தண்ணீர் தேங்கினால் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ அதிக வாய்ப்புகள் உள்ளதால் மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதன்பின் ஊராட்சி செயலாளர் மற்றும் சுகாதார துறை அலுவலர்களிடம் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அவருடன் மாவட்ட மலேரியா அலுவலர் உதயகுமார், வட்டார மருத்துவ அலுவலர் சங்கரன், டாக்டர்கள் சோனைமுத்து, விக்ரமன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வீரப்பெருமாள், சுகாதார ஆய்வாளர்கள் சந்தனராஜ், கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்