பெட்ரோலிய பொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்

பெட்ரோலிய பொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று எரிசக்தி முகமையின் மேலாண் இயக்குனர் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2017-08-10 23:25 GMT

புதுச்சேரி,

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் தேசிய இளைஞர் கூட்டுறவு சங்கம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்ரே‌ஷன் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் உலக இயற்கை எரிசக்தி தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நடந்த இந்த நிகழ்ச்சிக்கு புதுவை அரசின் கூடுதல் செயலர் மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமையின் மேலாண் இயக்குனர் சுமிதா தலைமை தாங்கி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

குறைவாக பயன்படுத்த வேண்டும்

வாகனங்களை இயக்குவது, மோட்டார்களை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு எரிசக்தி பயன்படுகிறது. ஆனால் எரிசக்திக்காக பூமியில் இருந்து எடுக்கப்பட்டுவரும் பெட்ரோல் மற்றும் எரிபொருட்கள் குறைந்து கொண்டே வருகின்றன. அதேசமயம் மக்கள் தொகை பெருகிவருவதாலும், எரிசக்தி பயன்பாடு அதிகரித்து வருவதாலும் பெட்ரோல் உள்பட எரி பொருட்களின் தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இயற்கை எரிசக்தி பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஆகஸ்டு 10–ந் தேதி உலக இயற்கை எரிசக்தி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலக அளவில் எரிசக்தி தேவை அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா 3–ம் இடத்தில் உள்ளது. இதனால் இயற்கை எரிவாயு உற்பத்தியை பெருக்குவது அவசியமாகிறது. இயற்கை எரிவாயு உற்பத்தியும், பயன்பாடும் அதிகரிக்கும்போது விவசாயிகளுக்கு வருமானமும், சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பும் கிடைக்கும். மேலும் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து, நாட்டின் அன்னிய செலவாணியும் சேமிக்கப்படும். பெட்ரோல் உள்பட எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இது தொடர்பாக மாணவர்கள் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பரிசுகள்

நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் கார்ப்ரே‌ஷன் நிறுவன சீனியர் பிளாண்ட் மேலாளர் பாண்டியன், சென்னை மேலாளர் அனில்குமார், ஜீவானந்தம் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் சந்திரசேகர் மற்றும் மாணவ–மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இயற்கை எரிசக்தி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்