கர்ப்பிணியை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க டீசல் செலவுக்கு வாங்கிய 800 ரூபாயை திரும்ப வழங்க வேண்டும்

கர்ப்பிணியை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க டீசல் செலவுக்கு வாங்கப்பட்ட 800 ரூபாயை திரும்ப வழங்க வேண்டும் என்று லோக் அயுக்தா நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2017-08-10 23:10 GMT

ஹாவேரி,

ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா அங்சாபுராதண்டா கிராமத்தை சேர்ந்தவர் சாக்ரிபாய். திருமணம் ஆனவர். கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் ராணிபென்னூர் தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அவர் மேல்சிகிச்சைக்காக தாவணகெரே மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது.

முன்னதாக, சாக்ரிபாயை தாவணகெரே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் டிரைவர் மஞ்சுநாத், ஆம்புலன்சுக்கு டீசல் போடுவதற்காக ரூ.800 கேட்டுள்ளார். இதையடுத்து, ரூ.800–யை அவருடைய உறவினர் டிரைவரிடம் கொடுத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தான் சாக்ரிபாய் ராணிபென்னூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தாவணகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் கடந்த 2015–ம் ஆண்டு ஜூலை மாதம் 12–ந் தேதி நடந்தது.

இந்த நிலையில், ஆம்புலன்ஸ் டிரைவரின் பொறுப்பற்ற நடவடிக்கைக்கு எதிராக லோக் அயுக்தாவில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் லோக் அயுக்தாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தாவணகெரே லோக் அயுக்தா சூப்பிரண்டுக்கு, லோக் அயுக்தா நீதிபதி விஸ்வநாத் செட்டி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர், இயக்குனர், தாவணகெரே மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி ஆகியோருக்கு விஸ்வநாத் செட்டி நோட்டீசு ஒன்றை அனுப்பினார். அதில், கர்ப்பிணி சாக்ரிபாயிடம் டீசல் செலவுக்கு பணம் வாங்கியது கண்டிக்கத்தக்கது. இதற்காக வசூலிக்கப்பட்ட ரூ.800–யை சம்பந்தப்பட்டவரின் வங்கி கணக்கில் 8 வாரங்களில் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்