பெண்ணை அடித்து கொன்று சாலையோரம் உடல் வீச்சு தாய் - மகன்களிடம் போலீசார் விசாரணை

திருவெறும்பூர் அருகே பெண்ணை அடித்து கொன்று சாலையோரம் உடல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக தாய்-மகன்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-08-10 23:30 GMT
திருவெறும்பூர்,

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் கல்லணை மெயின்ரோட்டில் வேங்கூர் அருகே உள்ள வாரியார்நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன்(வயது 64). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி முத்துலெட்சுமி(60). இவர்களுக்கு ஈஸ்வரி, ராஜேஸ்வரி என்ற 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதில் ஈஸ்வரி பெற்றோருடன் தங்கியிருந்து அவர்களை கவனித்து வந்தார்.அதே பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரேவதி(43). இவர் அதே பகுதியில் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு நவீன்குமார்(21) உள்பட 2 மகன்கள் உள்ளனர். இதில் 14 வயதுடைய இளைய மகன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

முத்துலெட்சுமியிடம், ரேவதி தனது அவசர தேவைகளுக்கு கடன் வாங்குவார். பின்னர் அதனை திருப்பி கொடுப்பார். முத்துலெட்சுமியிடம் பணம் இல்லாத நேரங்களில் அவருடைய நகைகளை வாங்கி அடகு வைத்து பணம் பெற்றுக்கொள்வார். பின்னர் அவருடைய நகைகளை ரேவதி திருப்பி தருவார்.

இந்நிலையில் ரேவதி, முத்துலெட்சுமியிடம் ஒரு பெரிய தொகையை கடனாக கேட்டுள்ளார். ஏற்கனவே சில லட்சங்களை ரேவதி தர வேண்டி இருந்ததால், பணம் தர முத்துலெட்சுமி மறுத்துவிட்டார். இதனால் சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இருப்பினும் ரேவதி முத்துலெட்சுமியிடம் மீண்டும், மீண்டும் பணம் கேட்டு நச்சரித்து வந்தார். இதையடுதுது முத்துலெட்சுமியின் மகள்கள், எக்காரணம் கொண்டும் உங்களுக்கு பணம் கடனாக கொடுக்க மாட்டோம் என்று ரேவதியிடம் கூறிவிட்டனர். இதனால் ரேவதி அவர்கள் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஈஸ்வரி பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். அப்போது முத்துலெட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது முத்துலெட்சுமியை காணவில்லை. அவருடைய உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து பிரகாஷ் நகரில் வசிக்கும் முத்துலெட்சுமியின் அக்காள் இன்பவள்ளி என்பவரிடம் முத்துலெட்சுமி காணாமல் போன தகவலை கூறி, அவரை வீட்டிற்கு வரவழைத்தனர். பின்னர் அவரின் ஆலோசனைப்படி நேற்று முன்தினம் இரவே திருவெறும்பூர் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.நேற்று அதிகாலை இன்பவள்ளி வீட்டின் வாசற்படி அருகே அமர்ந்து, தெருவை பார்த்து கொண்டிருந்தார். அப்போது ரேவதி வீட்டில் இருந்து ஒரு சாக்குப்பையை ரேவதியும், அவருடைய மகன்களும் இழுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த இன்பவள்ளி இது குறித்து தனது உறவினர்களிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் அந்த பகுதி முழுவதும் மீண்டும் தேடினர். அப்போது அந்தப்பகுதியில் உள்ள சாலையோரத்தில் முத்துலெட்சுமி தலையில் பலத்த ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனால் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் திருவெறும்பூர் போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துலெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, சந்தேகத்திற்கு இடமாக ரேவதியும், அவருடைய மகன்களும் ஒரு சாக்கு மூட்டையை இழுத்து வந்ததையும், முத்துலெட்சுமி அணிந்திருந்த 5 பவுன் தாலிச்சங்கிலி மற்றும் வளையல், மோதிரம், தோடு ஆகிய 10 பவுன் நகைகளை காணவில்லை, என்றும் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து ரேவதி மற்றும் அவருடைய மகன்களை பிடித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நேற்று முன்தினம் இரவு வட்டி கேட்டு முத்துலெட்சுமி தங்கள் வீட்டிற்கு வந்ததாகவும், தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தில் முத்துலெட்சுமி அணிந்திருந்த 10 பவுன் நகைகளை ரேவதி பறித்துக்கொண்டு, தாங்கள் கேட்ட ரூ.4 லட்சம் கடனை தராத கோபத்தில் தன்னுடைய மகன்கள் உதவியோடு, அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து அடித்தபோது முத்துலெட்சுமி இறந்து விட்டார் என்றும், நள்ளிரவில் மழை பெய்ததால் பிணத்தை அப்புறப்படுத்த முடியாததால் நேற்று அதிகாலை பிணத்தை எடுத்து வெளியில் போட்டதாகவும் அவர்கள் கூறியதாக போலீசார்தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்