தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிர படுத்த கலெக்டர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரபடுத்த வேண்டும் என மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினருக்கு கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2017-08-10 22:00 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரபடுத்த வேண்டும் என மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினருக்கு கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

டெங்கு கொசு

தூத்துக்குடி மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் மூலம், அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில், டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:–

தூத்துக்குடி மாவட்டத்தில், பொது சுகாதாரத்துறை மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து, தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் கடந்த ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தன்மை மற்றும் சூழ்நிலைகளை கணக்கிட்டு அந்த பகுதிகளில் டெங்கு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளி–கல்லூரிகளில்...

தொடர்ச்சியாக டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை ஒழிக்க, மாநகராட்சி பணியாளர்கள், சுகாதார பணியாளர்களை கொண்டு கொசு ஒழிப்பு மருந்துகளை அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தெளிக்கவும், தொட்டிகளை பாதுகாப்பாக மூடி போட்டு வைக்கவும், கழிவறைகள், வகுப்பறைகள் மற்றும் வளாகங்களை சுத்தமாக வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழிப்புணர்வு

அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களை கொண்டு மாணவ, மாணவிகளுக்கு டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வுகளை தீவிரப்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.

பொது மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கவிடாமலும், தேவையற்ற உபயோகமற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகும் தேங்காய் மட்டை, பழைய டயர்கள், தேவையற்ற நீரை அகற்றுதல், உடைந்த சிமிண்டு தொட்டிகள், பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள நீர் தொட்டிகளில் வைரஸ் கொசுக்களை ஒழிக்கும் மருந்துகளை சுகாதாரப்பணியாளர்களை கொண்டு தெளிக்க வேண்டும், என்றார்.

யார்–யார்?

இந்த கூட்டத்தில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோராஜா, பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர்கள் ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மாகின் அபுபக்கர், உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கவிக்னேஷ், மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கொண்டனர்.

மேலும் செய்திகள்