இரும்பு பொருட்களை கடத்திய காரை மோட்டார் சைக்கிளில் விரட்டிய வாலிபர்கள்
வாணாபுரம் அருகே இரும்பு பொருட்களை காரில் கடத்தி செல்ல முயன்றவர்களை பொதுமக்கள் துரத்திச் சென்றனர்.
வாணாபுரம்,
வாணாபுரம் அருகே இரும்பு பொருட்களை காரில் கடத்தி செல்ல முயன்றவர்களை பொதுமக்கள் துரத்திச் சென்றனர். அதில் ஒருவரை அவர்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
வாணாபுரம் அருகே அத்திபாடியில் அப்பாதுரை (வயது 65) என்பவர் பேப்பர் நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனம் தற்போது செயல்படாமல் இருந்து வருகிறது. இதில் அதிகளவில் இரும்பு பொருட்கள் மற்றும் வயர்கள் இருந்துள்ளன. இந்த நிலையில் நேற்று மர்ம நபர்கள் 3 பேர் அந்த நிறுவனத்தில் இருந்த இரும்பு பொருட்களை காரில் கடத்தி செல்ல முயன்றனர். இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் காரை மடக்கி பிடிக்க சென்றனர்.ஆனால் கார் கள்ளக்குறிச்சி சாலை வழியாக வேகமாக தப்ப முயன்றது. இதையடுத்து அத்திபாடியை சேர்ந்த 30–க்கும் மேற்பட்டோர் மோட்டார்சைக்கிளில் காரை பின்தொடர்ந்தனர்.
ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. காரை பின்தொடர்ந்து வந்த அவர்கள் கிராம பொதுமக்கள் இளையாங்கன்னி கூட்டுசாலை அருகே மடக்கி பிடித்தனர். அப்போது 2 பேர் தப்பி ஓடி விட்டனர். கார் டிரைவர் மட்டும் அவர்களிடம் சிக்கிக்கொண்டார். இதையடுத்து காரை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். மேலும் பிடிபட்டவரை அத்திபாடியில் உள்ள கிராம சேவை மையத்தில் கட்டி வைத்தனர். தகவல் அறிந்த வாணாபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்களிடம் அந்த நபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டம் காங்கையனூரை சேர்ந்த அருணாச்சலம் மகன் கோபிநாத்(21) என்பது தெரியவந்தது. பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை போலீசார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 நபர்கள் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.