கணவனின் கள்ளக்காதலை கண்டித்த பெண் கிணற்றில் பிணமாக மிதந்த மர்மம்
கணவனின் கள்ளக்காதலை கண்டித்த பெண் கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக மிதந்தார்.
திருப்பத்தூர்,
கணவனின் கள்ளக்காதலை கண்டித்த பெண் கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாகவும், கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பெண்ணின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் அருகே உள்ள கொரட்டி தண்டுகானூர் பகுதியை சேர்ந்தவர் சென்னப்பன் (வயது 42). இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மயில் (வயது 35). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 1 மகன், 1 மகள் உள்ளனர்.சென்னப்பனுக்கும், அவரது அண்ணி குப்பம்மாளுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. அதனை மயில் கண்டித்து வந்தார். அதனால் சென்னப்பனுக்கும், மயிலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் சென்னப்பன் அடித்து உதைத்ததாக கூறி போலீஸ் நிலையத்தில் மயில் புகார் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான கிணற்றில் மயில் பிணமாக கிடந்தார். இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் தற்கொலை என வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். நேற்று மயிலின் பெற்றோர், உறவினர்கள் திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி சென்னப்பன், குப்பம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘கள்ளக்காதலை தட்டி கேட்டதால் தான் மயிலை இவர்கள் 2 பேரும் தான் அடித்து கொலை செய்து, கிணற்றில் வீசியிருப்பார்கள்’’ என்றனர்.அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து, சென்னப்பன், குப்பம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அதன்பேரில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மயில் இறந்தது தொடர்பாக சென்னப்பன், குப்பம்மாள் ஆகிய 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.