மும்பை பல்கலைக்கழகத்திற்கு செயல் துணைவேந்தர் நியமனம்
மும்பை பல்கலைக்கழகத்திற்கு செயல் துணைவேந்தர் ஒருவரை கவர்னர் வித்யாசாகர் நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.
மும்பை,
தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், மும்பை பல்கலைக்கழகத்திற்கு செயல் துணைவேந்தர் ஒருவரை கவர்னர் வித்யாசாகர் நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.
மும்பை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. ஆன்–லைனில் மதிப்பீடு செய்யும் பணியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதை கண்டித்து மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தநிலையில் யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே மாநில கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான வித்யாசாகர் ராவை சந்தித்து மாநில உயர்கல்வித்துறை மந்திரி மற்றும் பல்கலைக்கழக வேந்தர் சஞ்சய் தேஷ்முக் ஆகியோரை பதவி நீக்கம் செய்யவேண்டி கோரிக்கை மனு அளித்தார்.
இந்தநிலையில், கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பை பல்கலைக்கழகத்திற்கு செயல் துணைவேந்தராக பேராசிரியர் திரேன் பட்டேல் என்பவரை நியமித்து அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.இது குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பேராசிரியர் திரேன் பட்டேல் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை செயல் துணைவேந்தராக செயல்படுவார் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.