இளைஞர்களிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்தவருக்கு 5 ஆண்டு ஜெயில்

வங்கியில் வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் ரூ.27 லட்சம் வசூலித்து மோசடி செய்தவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2017-08-09 21:59 GMT

மும்பை,

மும்பையை சேர்ந்தவர் ஆனந்த்(வயது65). இவர் கடந்த 2005–ம் ஆண்டு ஒரு முதலீடு திட்டத்தை ஆரம்பித்தார். அதில், பண முதலீடு செய்யும் இளைஞர்களுக்கு மும்பை மாவட்ட சென்டிரல் கோ–ஆபரேடிவ் வங்கியில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்து இருந்தார்.

மேலும் முதலீடாக செலுத்தும் தொகை வைப்பு தொகையாக வைத்து திருப்பி தரப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். இதை நம்பிய பலர் அவரிடம் ரூ.50 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் வரையிலும் முதலீடு செய்து உள்ளனர்.

மேலும் சிலர் ஏற்கனவே தாங்கள் பார்த்த வேலையையும் விட்டுவிட்டு இவரது முதலீடு திட்டத்தில் சேர்ந்து உள்ளனர்.

இந்தநிலையில் அவர் தன்னிடம் பணம் முதலீடு செய்த யாருக்கும் வங்கியில் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்தவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் ஆனந்தை கைது செய்தனர். விசாரணையில், அவர் ரூ.27 லட்சம் வரையிலும் வசூலித்து மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர் மீது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, அவர் மீதான மோசடி குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது ஆனந்துக்கு மாஜிஸ்திரேட்டு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்