கதிராமங்கலம் போராட்டத்தில் கைதானவர்களுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் பெ. மணியரசன் பேட்டி

கதிராமங்கலம் போராட்டத்தில் கைதானவர்களுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியதில் மனித உரிமைகள் மீறப்பட்டு இருப்பதாக திருச்சி மத்திய சிறை வாசலில் மணியரசன் கூறினார்.

Update: 2017-08-09 23:00 GMT

திருச்சி,

கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அதற்கான உத்தரவு இன்னும் திருச்சி மத்திய சிறைக்கு வந்து சேராததால் அவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

இந்நிலையில் தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ. மணியரசன் நேற்று திருச்சி மத்திய சிறைக்கு வந்து ஜெயராமன் உள்ளிட்டவர்களை பார்த்து சந்தித்து பேசினார். பின்னர் சிறை வாசலில் மணியரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

கதிராமங்கலம் கிராமத்தில் எண்ணெய் எடுப்பதற்காக போடப்பட்டிருந்த குழாய்கள் உடைந்து சேதம் ஏற்பட்டதால் தான் மக்கள் அதற்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அவர்கள் மீது போலீசார், ஆயுதம் வைத்து இருந்ததாக பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து உள்ளனர். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அளித்த புகாரில் பேராசிரியர் ஜெயராமனுக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் தமிழக அரசு சார்பில் திருவிடைமருதூர் தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் தொடரப்பட்ட வழக்கில் மிக தாமதமாக கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்து உள்ள இந்த ஜாமீன் உத்தரவின்படி கும்பகோணம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் உரிய பிணைபத்திரங்களை தாக்கல் செய்த பின்னர் தான் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரும் சிறையில் இருந்து வெளியே வர முடியும். விசாரணை முடிந்து 20 நாட்களுக்கு பின்னர் கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டு இருப்பதில் உள்ள மனித உரிமை மீறல்கள் பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்ய இருக்கிறோம்.

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு ஆதரவாக ஆளும் கட்சியான அ.தி.மு.க.வினர் தற்போது களம் இறங்கி இருக்கிறார்கள். இந்த திட்டத்தை பற்றி விளக்கி பிரசாரம் செய்து வருகிறார்கள். மக்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டிய ஆளும் கட்சியினர் மக்களுக்கு எதிராக பிரசாரம் செய்து வருவது கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்