புதிய கட்டிடத்துக்கு பள்ளியை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்த மாணவ–மாணவிகள்

பல்லடம் அறிவொளி நகரில் உள்ள பள்ளியை புதிய கட்டிடத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர். அவர்களுக்கு ஆதரவாக அந்த பகுதியில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது.

Update: 2017-08-09 22:45 GMT
பல்லடம்,

பல்லடம் அறிவொளி நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் தொடக்கப்பள்ளியில் 432 மாணவ–மாணவிகளும், உயர்நிலைப்பள்ளியில் 381 மாணவ–மாணவிகளும் படித்து வருகிறார்கள். இதில் உயர்நிலைப்பள்ளியில் போதுமான வகுப்பறை வசதி இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அறிவொளி நகரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆறுமுத்தாம் பாளையத்தில் ரூ.1 கோடியே 65 லட்சம் செலவில் பள்ளிக்காக புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. 90 சதவீதம் பணிகள் முடிந்து விட்ட நிலையில் இன்றும் ஒரு மாதத்துக்குள் புதிய கட்டிடத்துக்கு உயர்நிலைப்பள்ளி மாற்றப்பட உள்ளது.

இதுபற்றி அறிந்த அந்த பகுதி பொதுமக்கள், பள்ளியை புதிய கட்டிடத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என்று முடிவுசெய்தனர்.

அதன்படி, நேற்று தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 432 பேர் படிக்கும் தொடக்கப்பள்ளியில் 17 மாணவர்களும், 13 மாணவிகளும், 381 பேர் படிக்கும் உயர்நிலைப்பள்ளியில் 57 மாணவர்களும், 65 மாணவிகளும் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தனர்.

மேலும், மாணவ–மாணவிகளுக்கு ஆதரவாக அந்த பகுதியில் கடை அடைப்பு போராட்டமும் நடந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள சுமார் 50–க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அந்தபகுதி பொதுமக்களிடம் கேட்ட போது, “எங்கள் கிராமத்தில் சுமார் 1000 குடும்பத்தினருக்கு மேல் வசித்து வருகிறோம். தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி இங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் மாணவ–மாணவிகளால் அங்கு சென்று படிக்க மிகவும் சிரமப்படுவார்கள். எனவே தற்போதுள்ள பள்ளி வளாகத்திலேயே மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இதுபற்றி அதிகாரிகள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்” என்றனர்.

மேலும் செய்திகள்