அவினாசி அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அவினாசி அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-08-09 22:15 GMT

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்தில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலைமறியல்செய்வது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் அவினாசி ஒன்றியம் நடுவச்சேரி ஊராட்சி மாரப்பம் பாளையத்தில் சுமார் 500–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 5 மாதமாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இதனால் அவர்கள் தினமும் காலையில் குடிநீருக்காக தோட்டம், தோட்டமாக சென்று வருகிறார்கள். இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கூறி ஊராட்சி நிர்வாகத்திடமும், ஒன்றிய அலுவலகத்திலும் பலமுறை அந்த பகுதி பொதுமக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த சுமார் 100 பெண்கள் உள்பட 200–க்கும் மேற்பட்டோர் குடிநீர் கேட்டு மாரப்பம்பாளையம் அம்மன் கோவில் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அவினாசி போலீசார் மற்றும் அவினாசி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது விரைவில் உங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்