தனக்கன்குளத்தில் புதிதாக தொடங்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் போராட்டம்

தனக்கன்குளத்தில் புதிதாக தொடங்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் போராட்டம்

Update: 2017-08-09 23:00 GMT

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தை அடுத்து உள்ள தனக்கன்குளம் ஊராட்சி திருவள்ளுவர் நகர் பஸ் நிறுத்ததில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. அந்த கடையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு, அந்த பகுதி மக்கள் பெரும் சிரமமடைந்து வருவதாக கூறி கடந்த சில மாதங்களாக அந்த கடையை அகற்ற வேண்டும் என்று அனைத்து கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் தொடர் போராட்டம் நடந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திருவள்ளுவர் நகர் பஸ் நிறுத்தத்திலிருந்த டாஸ்மாக் கடை அங்கு இருந்து அகற்றப்பட்டு தனக்கன்குளம் முல்லை நகர் நேரு நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு இரவோடு இரவாக கொண்டு செல்லப்பட்டது. இதற்கு அந்த பகுதி பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் நேற்று காலை டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் தடுத்து போராட்டம் நடத்தினர். இதனால் தகவலறிந்து வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அதை கேட்காமல், புதிதாக தொடங்கப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டபடி ஆவேசமாக குரல் எழுப்பினர்.

நேரம் செல்ல செல்ல ஏராளமான பெண்கள் திரண்டதால் பரபரப்பு கூடியது. இதையடுத்து திருப்பரங்குன்றம் வருவாய் ஆய்வாளர் செந்தில், தனக்கன்குளம் கிராம நிர்வாக அலுவலர் பொன்ராஜ் ஆகியோர் வந்து போராட்டத்தில் ஈடுட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். இதையடுத்து போராட்டம் நடத்திய பெண்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்