தனியார் நிலத்தில் கொட்டப்படும் குப்பைகள் பொதுமக்கள் எதிர்ப்பு

பழனி அருகே கணக்கன்பட்டியில் தனியார் நிலத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2017-08-09 21:45 GMT

பழனி,

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட அங்குள்ள குப்பை கிடங்கில் இடம் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டியில் தனியார் நிலத்தில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் நிலமும் மாசடைகிறது.

இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் தனியார் நிலத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கணக்கன்பட்டியை சேர்ந்த துர்க்கையப்பன் (வயது 40) என்பவர் தனது விவசாய நிலத்தில் வண்டல் மண் எடுத்துவிட்டு அந்த இடத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் குப்பைகளை கொட்ட அனுமதித்துள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே நேற்று காலை லாரிகளில் குப்பைகள் கொண்டுவரப்பட்டு துர்க்கையப்பனுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பள்ளத்தில் கொட்டப்பட்டது. இதையறிந்த பொதுமக்களும், விவசாயிகளும் அங்கு திரண்டனர். அப்போது இங்கு கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறந்து தங்கள் நிலங்களிலும் பரவுகிறது. இதனால் எங்களுடைய நிலங்களும் மாசடைகிறது. எனவே இங்கு குப்பைகளை கொட்டக்கூடாது என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்களுடன் பேசிய துர்க்கையப்பன் பள்ளத்தில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கிறேன். மேலும் இனிவரும் காலங்களில் இங்கு குப்பைகளை கொட்ட அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்களும், விவசாயிகளும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்