ஓட்டப்பிடாரம் அருகே மதுக்கடையை அகற்றக்கோரி 2–வது நாளாக பொதுமக்கள் முற்றுகை
ஓட்டப்பிடாரம் அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் நேற்று 2–வது நாளாக முற்றுகை போராட்டம் நடத்தினர்.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் நேற்று 2–வது நாளாக முற்றுகை போராட்டம் நடத்தினர்.
டாஸ்மாக் கடைஓட்டப்பிடாரத்தில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி செல்லும் சாலையில் ஏ.கே.எஸ். நகர் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு டாஸ்மாக் மதுக்கடை புதிதாக திறக்கப்பட்டு மது விற்பனை நடந்து வருகிறது. இந்த மதுக்கடைக்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் ஒரு மாதத்துக்குள் டாஸ்மாக் கடை அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் ஒருமாதம் ஆகியும் கடையை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இரவிலும் தொடர்ந்து முற்றுகைஇதனால் மக்கள் மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை முன்பு அந்த பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் சேர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் தாசில்தார் காளிராஜா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இரவு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடந்தது.
2–வது நாளாக..நேற்று 2–வது நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் ஆகியோர் தலைமையில் போராட்டம் தொடர்ந்தது. இந்தநிலையில் டாஸ்மாக் கடையை திறப்பதற்காக ஊழியர்கள் நேற்று மதியம் வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
அதன்பிறகு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.