கடையநல்லூர் அருகே மரத்தில் கார் மோதி டிரைவர் பலி; 4 பேர் படுகாயம்

கடையநல்லூர் அருகே மரத்தில் கார் மோதியதில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2017-08-09 21:30 GMT

கடையநல்லூர்,

கடையநல்லூர் அருகே மரத்தில் கார் மோதியதில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

மரத்தில் மோதியது

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்தவர் ஜாபர் சாகீப் (வயது 40), டிரைவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த முகமது மைதீன், மகபுப் பாட்ஷா, கமாலுதின் சேக், அலாவுதீன் ஆகியோரும் குற்றாலத்துக்கு சுற்றுலாவாக காரில் புறப்பட்டு வந்தனர்.

நேற்று அதிகாலை கடையநல்லூருக்கும், சொக்கம்பட்டிக்கும் இடையே உள்ள தனியார் பள்ளி அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் உள்ள பனை மரத்தில் கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

டிரைவர் சாவு

காரை ஓட்டி வந்த ஜாபர்சாகீப் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நீண்ட நேரம் போராடி ஜபார்சாகீப் உடலை கார் இடிபாடுகளில் இருந்து மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றாலத்துக்கு சுற்றுலா வந்த இடத்தில் ஏற்பட்ட விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்