வாஸ்கோடகாமா–வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் தென்மேற்கு ரெயில்வே அறிவிப்பு

வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவையொட்டி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வாஸ்கோடகாமா–வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

Update: 2017-08-08 22:41 GMT

பெங்களூரு,

வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா நடைபெறுவதையொட்டி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வாஸ்கோடகாமா–வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, வருகிற 27–ந் தேதி மற்றும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 3–ந் தேதி ஆகிய தினங்களில் வாஸ்கோடகாமா ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டிஎண்: 07315) மறுநாள் மதியம் 1 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

மறுமார்க்கமாக, வருகிற 28 மற்றும் அடுத்த மாதம் 4 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணி ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07316) மறுநாள் இரவு 9.10 மணிக்கு வாஸ்கோடகாமாவை சென்றடையும். இந்த சிறப்பு ரெயில்கள் இருமார்க்கமாகவும் மத்கான், கார்வார், கும்டா, ஒன்னாவர், பட்கல், குந்தாபுரா, உடுப்பி, முல்கி, சூரத்கல், மங்களூரு சந்திப்பு, கண்ணூர், தாலசேரி, கோழிகோடு, சூரனூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பெங்களூரு யஷ்வந்தபுரம்–எர்ணாகுளம் இடையே தட்கல் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டிஎண்: 06547/06548) இருமார்க்கமாக தற்காலிகமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, யஷ்வந்தபுரம்–எர்ணாகுளம் தட்கல் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06547) சேவை அடுத்த மாதம் (செப்டம்பர்) 5–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு சேவையில் 4 முறை இயங்கும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலானது வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் யஷ்வந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.

மறுமார்க்கமாக, எர்ணாகுளம்–யஷ்வந்தபுரம் தட்கல் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06548) சேவை அடுத்த மாதம் 6–ந் தேதியில் இருந்து 27–ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த நீட்டிப்பு சேவையில் 4 முறை இயங்கும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலானது வாரந்தோறும் புதன்கிழமைகளில் எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு யஷ்வந்தபுரத்தை வந்தடையும்.

இதேபோல், இருமார்க்கமாக வாரம் 2 முறை இயங்கும் பெங்களூரு யஷ்வந்தபுரம்–ஹஸ்ரத் நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் (12629/12630) மற்றும் இருமார்க்கமாக வாரம் 2 முறை இயங்கும் யஷ்வந்தபுரம்–சண்டிகர் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் (22685/22686) ஆகியவை வருகிற 17–ந் தேதியில் இருந்து அடுத்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் 16–ந் தேதி வரை சோதனை அடிப்படையில் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே ரெயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்ல உள்ளன.

மேலும், சென்னை கோட்டத்தில் கவனூர் யார்டு பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக, கே.எஸ்.ஆர்.பெங்களூரு–அரக்கோணம் பயணிகள் ரெயில் (56262) இன்று (புதன்கிழமை) மற்றும் வருகிற 12, 13 ஆகிய தேதிகளில் 15 நிமிடங்களும், 19, 26 ஆகிய தேதிகளில் 80 நிமிடங்களும், 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் 180 நிமிடங்களும், 28 மற்றும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 4 ஆகிய தேதிகளில் 165 நிமிடங்களும் தாமதமாக அரக்கோணம் ரெயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த பணி எதிரொலியால், கே.எஸ்.ஆர்.பெங்களூரு–சென்னை ஏ.சி. 2 அடுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் 20–ந் தேதி 30 நிமிடங்களும், 21, 28 மற்றும் அடுத்த மாதம் 4 ஆகிய தேதிகளில் 15 நிமிடங்களும் தாமதமாக சென்னையை சென்றடைய உள்ளது.

மேற்கண்ட தகவல் தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்