முதுமலை தெப்பக்காடு முகாமில் பாகனுடன் இயல்பாக பழகும் குட்டி யானை

முதுமலை தெப்பக்காடு முகாமில் உள்ள குட்டியானை பாகனுடன் இயல்பாக பழகுகிறது.

Update: 2017-08-08 22:30 GMT

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகமானது தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களிலேயே சிறந்த புலிகள் காப்பகமாக திகழந்து வருகிறது. 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த காப்பகத்தில் யானைகள், புலிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

குறிப்பாக வனப்பகுதியில் தாயிடம் இருந்து பிரிந்து தவிக்கும் குட்டி யானைகளை வளர்க்கவும், மனிதர்களை தாக்கி கொல்லும் காட்டு யானைகளை பிடித்து வந்து வளர்க்கவும் முதுமலை தெப்பக்காடு பழமை வாய்ந்த வளர்ப்பு யானை முகாம் உள்ளது.

இந்த முகாமில் தற்போது 15 ஆண் யானைகளும், 7 பெண் யானைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிறந்து 11 மாதங்களே ஆன ஒரு ஆண் குட்டி யானை தாயை பிரிந்து தவித்தது. அந்த யானை சில நாட்களுக்கு முன்பு முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு வரப்பட்டது.

முகாமுக்கு புதிதாக வந்த இந்த யானை குட்டி அங்குள்ள கிராலில் (மரக்கூண்டு) அடைக்கப்பட்டு பாதுகாப்புடன் வளர்க்கப்பட்டு வருகிறது. முகாம் பகுதியில் குளிர் நிலவுவதால் குட்டி யானையை காப்பாற்ற ஹீட்டர் (வெப்பமூட்டும் கருவி) மற்றும் மெத்தை விரிக்கப்பட்டது. குட்டி யானைக்கு முதுமலை வன கால்நடை டாக்டர் விஜய ராகவன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். யானை குட்டியை கண்காணித்து வளர்க்க பொம்மன் என்ற பாகன் பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளார்.

இவர் யானை குட்டியை கிருஷ்ணகிரி பிடிபட்டபோது அங்கு சென்று 2 மாதங்கள் அங்கேயே தங்கி யானை குட்டியுடன் பழகினார். இதனால் அவருடன் அந்த யானை குட்டி நன்றாக பழகிய பின்னரே முதுமலைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது அந்த யானை குட்டி பொம்மனிடம் மிகவும் பாசமாக பழகி வருகிறது.

காலை மற்றும் மாலை நேரங்களில் கிராலில் இருந்து பொம்மன் அந்த குட்டி யானையை வெளியில் அழைத்து வந்து நடை பயணம் செய்ய வைக்கிறார். அதனை அந்த குட்டி யானையும் சிறப்பாக செய்து வருகிறது. குறிப்பாக குட்டி யானை பாகனை தலையால் முட்டி விளையாடுவதும், பொம்மன் புல்வெளியில் படுத்து உறங்கும்போது மனிதர்களை போல் குட்டி யானையும் அவருடன் படுத்து தூங்குகிறது. இதனை பார்த்து மற்ற யானை பாகன்களும், மருத்துவர், வனத்துறையினர் வியப்படைந்து வருகின்றனர். இதனால் அந்த குட்டி யானை முதுமலை வளர்ப்பு யானை முகாமின் செல்ல பிள்ளையாக உலா வர தொடங்கி உள்ளது.

மேலும் செய்திகள்