உரிய அனுமதியின்றி பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 9 வாகனங்கள் பறிமுதல்

உரிய அனுமதியின்றி பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2017-08-08 22:45 GMT

பூந்தமல்லி,

போக்குவரத்து ஆணையர் உத்தரவுப்படி பூந்தமல்லி வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதியின்றி பள்ளி மாணவ–மாணவிகளை ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து பூந்தமல்லி ஆர்.டி.ஓ. நெடுமாறன் தலைமையில் பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தீவிர சோதனை செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது உரிய அனுமதியின்றி பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 6 வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து ஆர்.டி.ஓ. நெடுமாறன் கூறுகையில்:–

பூந்தமல்லி வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சில இடங்களில் உரிய அனுமதி இன்றியும், சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடிய கார்களில் மாணவர்களை ஏற்றி செல்வதும் கண்டு பிடிக்கப்பட்டு இதுவரை 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியில் மாணவர்களை ஏற்றி செல்ல அனுமதி சான்று பெற்றபிறகே இந்த வாகனங்கள் மீண்டும் மாணவர்களை ஏற்றி செல்ல அனுமதிக்கப்படும்.

மேலும் இதுபோல் உரிமம் இல்லாமல் இயங்கும் பள்ளி வாகனங்களை கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். அதிக பாரம் ஏற்றி சென்ற 11 வாகனங்களின் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.1லட்சத்து 24ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிடிபடும் வாகனங்களின் உரிமம் மற்றும் ஓட்டுனர் உரிமம் தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் குன்றத்தூர் ஆர்.டி.ஓ. சுந்தரேசன் தலைமையில் குன்றத்தூர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது, உரிய அனுமதியின்றி பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குன்றத்தூர் பகுதிகளில் அதிக பாரம் ஏற்றி வந்த 17 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் ஓட்டுனர் உரிமம் எடுக்க வருபவர்களுக்கு சாலை விதிமுறைகள் குறித்தும், விபத்துகள் ஏற்படும்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குறும்படங்கள் காண்பிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் விளக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் இன்ஸ்பெக்டர்கள் குமரா, ஜெய்மனோகர், திருநாவுக்கரசு ஆகியோர் இருந்தனர்.

மேலும் செய்திகள்