சீருடைப்பணியாளர் தேர்வில் பங்கேற்க அனுமதி கோரி திருநங்கை வழக்கு விவரம் கேட்டு தெரிவிக்க ஐகோர்ட்டு உத்தரவு

சீருடைப்பணியாளர் தேர்வில் பங்கேற்க அனுமதி கோரி திருநங்கை தொடர்ந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விவரம் கேட்டு தெரிவிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-08-09 01:30 GMT

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

நான் ஒரு திருநங்கை. சமூகத்தில் பின்தங்கிய வகுப்பை சேர்ந்தவர். வறுமையான சூழலில் எனது தந்தையும் இறந்துவிட்டார். எனது பெயரை நஸ்ரியா என்று மாற்ற விண்ணப்பித்து இருந்தேன். இந்த நிலையில் 2–ம் நிலை காவலர் மற்றும் சிறைத்துறை 2–ம் நிலை வார்டன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியானது. அதற்கு திருநங்கை என்ற பிரிவில் விண்ணப்பித்து கடந்த மே மாதம் 21–ந்தேதி தேர்வு எழுதினேன்.

அந்த தேர்வில் வெற்றி பெற்றதால் உடல் தகுதி தேர்வுக்காக கடந்த (ஜூலை) 31–ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் சீதக்காதி சேதுபதி அரங்கிற்கு சென்றேன். அங்கு எனது பாலினம் குறித்த சான்றிதழ் இல்லை என்று கூறிய அதிகாரிகள், உடல் தகுதித்தேர்வில் கலந்து கொள்ள என்னை அனுமதிக்கவில்லை.

பின்னர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பாலின சோதனை செய்து சான்றிதழ் பெற்றேன். அதன்பேரில் கடந்த 4–ந்தேதி பாலின சான்றிதழுடன் உடல் தகுதித்தேர்வில் கலந்து கொள்ள சென்றேன். ஆனால் 31–ந்தேதி அன்றே என்னை நிராகரித்துவிட்டதாக தெரிவித்தனர். அதனால் தகுதித்தேர்வில் கலந்து கொள்ளமுடியவில்லை.

தமிழக அரசு 3–ம் பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்காக தனியாக விண்ணப்பத்தில் இடம் ஒதுக்கியுள்ளது. உடல் தகுதித்தேர்வின்போது மருத்துவ பரிசோதனை நடக்கும் என்று தான் நான் எண்ணினேன். இதற்காக அனைத்து சான்றிதழ்களுடன் சென்றிருந்தேன். எனவே என்னை காவலர் உடல் தகுதித்தேர்வில் கலந்து கொள்ளவிடாமல் நிராகரித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், காவலர் காலிப்பணியிடங்களில் எனக்கு ஒரு பணியிடம் ஒதுக்கவும், உடல் தகுதி தேர்வுக்கு என்னை அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய தலைவரிடம் விவரம் கேட்டு தெரிவிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற 17–ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்