கடையம் யூனியன் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை

கடையம் யூனியன் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-08-08 20:30 GMT

கடையம்,

கடையம் யூனியன் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

கிராம மக்கள்

கடையம் யூனியன் நாணல்குளம் கிராம மக்கள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் தங்களது சம்பள பணத்தை பொட்டல்புதூரில் உள்ள ஒரு வங்கியில் பெற்று வந்தனர். ஆனால் எந்த விதமான காரணம் இன்றி ரவணசமுத்திரத்தில் உள்ள வங்கிக்கு கிராம மக்களின் கணக்கு மாற்றப்பட்டதால், அவர்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து கடையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனுக்கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

முற்றுகை

இந்த நிலையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், கடையம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராமகிருஷ்ணன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் முத்துராஜன், பொருளாளர் ஜெயராஜ், மாவட்ட விவசாய சங்க தலைவர் முருகேசன் உள்பட கிராம மக்கள் கடையம் யூனியன் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம்) சீனிவாசன் கோவிந்தராஜூலு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் கிராம மக்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மீண்டும் பொட்டல்புதூரில் உள்ள வங்கி மூலம் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்