நெல்லை மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து தகவல் தெரிவிக்க தபால் அட்டைகள்

நெல்லை மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து தகவல் தெரிவிக்க தபால் அட்டைகள் வழங்கும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

Update: 2017-08-08 21:30 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து தகவல் தெரிவிக்க தபால் அட்டைகள் வழங்கும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

தபால் அட்டை

நெல்லை பாளையங்கோட்டை காந்திமதி அம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு சமூக நலத்துறை மூலம் குழந்தை திருமண தடை சட்ட விழிப்புணர்வு தபால் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

விழாவில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு 9–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை படிக்கும் 377 மாணவிகளுக்கு, குழந்தை திருமண தடை சட்ட விழிப்புணர்வு தபால் அட்டைகளை வழங்கினார்.

இந்த விழாவில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசுகையில் கூறியதாவது:–

தமிழக அரசு கல்வி மேம்பாட்டுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செய்து வருகிறது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை ஊக்கப்படுத்தி வருகிறது. பெண்களின் திருமண வயது 18–ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது, குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் குற்றம் ஆகும். பெண் குழந்தைகள் அனைவரும் சிறப்பாக உயர் கல்வி பயில வேண்டும், அதன் பிறகு வேலைவாய்ப்பை பெற்று பெற்றோருக்கு உதவ வேண்டும். இதன்மூலம் தன்னம்பிக்கையும், பொருளாதார மேம்பாடும் அடைய முடியும்.

புகார் அளிக்கலாம்

நெல்லை மாவட்டத்தில் 333 பள்ளிகளில் 9–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை படிக்கும் மாணவிகளுக்கு குழந்தை திருமண தடை சட்ட விழிப்புணர்வு குறித்த தபால் அட்டைகள் வழங்கப்படும். குழந்தை திருமணங்களை கண்டறிந்து முழுமையாக தடை செய்ய மாணவிகளுக்கு விழிப்புணர்வுவை ஏற்படுத்தவும், மாணவிகள் உற்றார் உறவினர், தோழிகளுக்கு குழந்தை திருமணம் செய்ய முயற்சி செய்தாலும், வேறு பல தொந்தரவுகள் இருந்தாலும் இந்த அட்டையில் எழுதி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி தகவல் தெரிவிக்கலாம். உங்களது கடிதத்தின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் ரகசியமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார்.

இந்த விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் முத்துலட்சுமி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சாத்தையா, தலைமை ஆசிரியை சிவகாமசுந்தரி மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்