உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம்
புதுச்சேரியில் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
புதுச்சேரி,
புதுவை தலைமை செயலகத்தில் தலைமை செயலர் மனோஜ் பரிதா, உலக வங்கி பிரதிநிதிகள் குழுத்தலைவர் தீபக்சிங் தலைமையிலான குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.350 கோடி ரூபாய் செலவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தரும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் குறித்து ஆய்வு செய்த போது, திட்டமிடப்பட்ட 1,100 வீடுகளில் தற்போது 830 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கிழக்கு கடற்கரை சாலையில் கட்டி முடிக்கப்பட்ட நவீன மீன் அங்காடியை 30 நாட்களில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, காலாப்பட்டில் உள்ள அவசர கால மையத்திற்கு புதிய தீயணைப்பு சாதனங்கள் வாங்குவது, துறைமுகப்பகுதியை தூய்மையாக வைத்திருத்தல், மீன் கழிவுகளை முறையாக கையாளுதல் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் மேரி கட்டிடம், காரைக்கால் நேரு மார்க்கெட் பணிகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
புதுவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் நிலை குறித்து உலக வங்கிக் குழு திருப்தி தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினர். கூட்டத்தில் நிதித்துறை செயலர் கந்தவேலு, திட்ட இயக்குனர் பார்த்திபன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.