கழிவறை வசதி செய்து தர வலியுறுத்தி மாணவ-மாணவிகள் சாலை மறியல்

பூம்புகார் தருமகுளம் பகுதி யில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் கழிவறை வசதி செய்து தர வலியுறுத்தி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-08-07 23:00 GMT
திருவெண்காடு,

நாகை மாவட்டம், பூம்புகார் தருமகுளம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கழிவறை வசதி இல்லாமல் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை மாணவ- மாணவிகள் 200 பேர் பள்ளியில் உடனே கழிவறை வசதி செய்து தரக்கோரி தருமகுளம் மெயின்ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாணவர்களுக்கு ஆதரவாக பா.ம.க. மாவட்ட ஒருங்கிணைந்த அமைப்பு தலைவர் அச்சுவெல்லம் ராஜரத்தினம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சுபாஷ், தவமணி, கார்-வேன் ஓட்டுனர் சங்க தலைவர் பாலு மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் பாலமுருகன், துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், ஒன்றிய ஆணையர் வாசுதேவன், பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் மனோகரன், பள்ளி ஆய்வாளர் திலக் ஆகியோர் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மேற்கண்ட பகுதியில் உள்ள அரசு பள்ளியில் விரைவில் கழிவறை வசதி செய்து தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இதனால் சீர்காழி-மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவர்களின் சாலை மறியல் குறித்து பூம்புகார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்