மாநகர பஸ்களை நடுவழியில் நிறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் மறியல் வாலிபர் கைது

கேளம்பாக்கத்தில் டிரைவர் தாக்கப்பட்டதை கண்டித்து மாநகர பஸ்களை நடுவழியில் நிறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-08-07 22:45 GMT

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரில் இருந்து தாம்பரம் நோக்கி நேற்று மாலை சென்னை மாநகர பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. பஸ்சை டிரைவர் பாலு என்பவர் ஓட்டி வந்தார். கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் மார்க்கமாக பஸ் சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பஸ்சை முந்தி செல்ல முயன்றார்.

அப்போது வாலிபருக்கும், டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர், டிரைவர் பாலுவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் டிரைவர் பஸ்சை நடுவழியில் நிறுத்தினார்.

இதற்கிடையே சம்பவம் குறித்து சக மாநகர பஸ் டிரைவர்களுக்கு தகவல் பரவியது. கேளம்பாக்கத்தில் நடுவழியில் ஆங்காங்கே சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாநகர பஸ்களை நிறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், டிரைவர் பாலுவுக்கு ஆதரவாக 100–க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் கேளம்பாக்கம் பழைய மாமல்லபுரம் சாலை ஓரமாக பஸ்களை நிறுத்தி அம்பேத்கர் சிலை அருகே போராட்டம் நடத்தினர். இதனால் சுமார் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே டிரைவரை தாக்கி விட்டு தப்பி ஓடியவர் குறித்து விசாரணை நடத்தியதில் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வேலுச்சாமி (வயது 28) என்பது தெரியவந்தது.

சம்பவம் குறித்து பஸ் டிரைவர் பாலு மற்றும் கண்டக்டர் அருணாச்சலம் அளித்த புகாரின்பேரில் கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுச்சாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகள்