பெண் கொலையில் 2 மாதத்துக்கு பின் துப்பு துலங்கியது கழுத்தை நெரித்து கொன்று கிணற்றில் வீசிய கள்ளக்காதலன் கைது
வெம்பக்கோட்டை அருகே பெண்கொலையில் 2 மாதத்துக்குபின்பு துப்பு துலங்கியது. சேலையால் கழுத்தை நெரித்துக்கொன்று கிணற்றில் வீசிய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ஏ.லட்சியாபுரத்தை சேர்ந்த ராமர் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த பெண் உடல் கடந்த ஜூன் மாதம் 5–ந் தேதி கைப்பற்றப்பட்டது. பயன்படுத்தப்படாமல் கிடந்த அந்த கிணற்றின் அருகே யாரும் செல்வது கிடையாது. அந்த பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது கிணற்றில் அழுகிய நிலையில் பெண் உடல் கிடந்தது தெரிந்தது.
அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் அழுகி இருந்த நிலையில் வெம்பக்கோட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். இதில் 2 மாதத்துக்கு பிறகு துப்புதுலங்கியது.
கிணற்றில் கிடந்தவர் அதேபகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி(வயது35) என்பதும் அவரை ஏ.லட்சியாபுரத்தை சேர்ந்த குமார்(28) என்பவர் கொலை செய்து கிணற்றில் வீசியதும் தெரியவந்தது. குமாரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் இந்த கொலையை செய்தது ஏன் என்பது பற்றிய பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:–
ராஜேஸ்வரிக்கு 2 மகள்கள் இருந்த நிலையில் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். மகள்கள் அதே பகுதியில் உள்ள அவரது உறவினரின் வீட்டில் இருந்துள்ளனர். குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த நிலையில் மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கும் குமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் மகள்களை ராஜேஸ்வரி சந்திப்பது குமாருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.
சம்பவத்தன்று காலை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த குமார் சேலையால் ராஜேஸ்வரியின் கழுத்தை நெரித்துள்ளார். பின்னர் உடலை வீட்டில் வைத்திருந்து இரவில் யாருக்கும் தெரியாமல் தூக்கிச்சென்று கிணற்றில் வீசியுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.